போர் வீரர்கள் நினைவு சின்னத்தை புனரமைக்க முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை
போர் வீரர்கள் நினைவு சின்னத்தை புனரமைக்க முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை
ADDED : மே 28, 2026 04:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தை புனரமைக்க வேண்டும் என, முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில், உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது போர் வீரர்கள் நினைவுச் சின்னம். அந்தப் புனிதமான இடம், இன்றைக்கு போதிய பராமரிப்பு இல்லாமல், குப்பைக் கூளமாகக் காட்சியளிப்பது பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாராக மாறிவிட்டது.
மது பாட்டில்களுடன் கும்பலாக அமர்த்து குடிக்கின்றனர். சில பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன் தன் மனக்குமுறலை பகிர்ந்து கொண்டார்.
தினமும் காலையில எத்தனையோ பொதுமக்கள், இந்நாள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எல்லாரும் இந்தச் சாலையிலதான் நடைப்பயிற்சி செய்றாங்க. ஆனா, யாருடைய கண்ணுலயும் இந்த அவலம் படலையாங்கிறது தான் எங்களோட ஆச்சர்யம்.
பகல்ல அசுத்தமாகக் கிடக்கும் இந்த வளாகம், இரவு நேரங்கள்ல சமூக விரோதிகளின் புகலிடமாகவும், தரங்கெட்ட செயல்கள் நடக்கும் இடமாகவும் மாறிப்போயிருக்கு. கடந்த 10 ஆண்டுகளா இந்த வளாகத்தைச் சுத்தமா பராமரிக்கணும்னு அரசாங்கத்துக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் புனரமைக்கவில்லை.
கவனிப்பாரற்று இருக்கும் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தை அரசு உடனே புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னத்தை, முன்னாள் ராணுவ வீரர்களின் வலியை உணர்ந்தாவது, புனரமைக்க கவர்னர், முதல்வர், முப்படை நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
