ADDED : ஜன 29, 2024 04:01 AM
திருக்கனுார்,: புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், இரண்டு நாள் கிராமிய கலை விழா சோரப்பட்டு கிராமத்தில் நடந்தது.
பாகூர், கரிக்கலாம்பாக்கம் மற்றும் சோரப்பட்டு ஆகிய கிராமங்களில் இரண்டு நாள் கிராமிய கலை விழா நேற்று முன்தினம் துவங்கியது.சோரப்பட்டு கிராமத்தில் நடந்த கிராமிய கலை விழாவை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தொடர்ந்து, கணேசன் கலை குழுவினரின் மங்கள இசை, கனாத் தென்றல் கலைக்குழுவின் பிரபு மற்றும் புதுச்சேரி மாநில கிராமிய கலைக்குழுவின் ராஜி ஆகியோரின் நாட்டுப்புறப் பாடல், எலந்தம்பட்டு தேசமுத்து மாரியம்மன் கலைக்குழுவின் மணிபாலன் தலைமையிலான பம்பை உடுக்கை காளி ஆட்டம் நடந்தது.
புதுச்சேரி எதிரொலி பறையாட்டம் கலைக்குழு மற்றும் புதுச்சேரி புயல் தப்பாட்டக் கலைக் கழகத்தின் தப்பாட்டம், புதுச்சேரி தாய்மண் கலை குழுவின் கிராமிய கலை, பிரத்தியங்கரா காளி நாட்டுப்புற கலைக்குழுவின் தெருக்கூத்து நடந்தது.