ADDED : ஜன 27, 2026 04:27 AM
வில்லியனுார்: குடியரசு தினத்தை முன்னிட்டு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 24 பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர்-அகரம், குருமாம்பேட், வில்லியனுார், சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, கணுவாப்பேட்டை, கோட்டைமேடு, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், கீழ்சாத்தமங்கலம், சிவராந்தம், அரியூர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளில் நேற்று காலை 10:00 மணி முதல் கிராம சபை கூட்டம் அந்தந்த பகுதி கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் நடந்தது.
கிராம சபை கூட்டங்களில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மின்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வங்கிகள், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வாளர்கள், மகளிர் குழுவினர் திரளாக பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
