/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
/
சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
ADDED : ஜன 07, 2025 05:52 AM

வில்லியனுார்: தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராம பகுதிகளுக்கு செல்ல சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரி பகுதியில், கீழுர், பங்கூர், சிவராந்தகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்ல சாலை அமைக்கப்படவில்லை.
அதனால், பள்ளி, கல்லுாரி, மாணவர்கள், பொதுமக்கள், அரியூர் வரை 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால், மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட செல்ல முடியாமல், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிராம பகுதிகளுக்கு செல்ல சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், சாலை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பங்கூர் அருகே நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாசில்தார் சேகர், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, பெரியசாமி ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக, தாசில்தார் கூறியதை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.