/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர பழ கடைகளில் திருடிய விழுப்புரம் நபர் கைது
/
சாலையோர பழ கடைகளில் திருடிய விழுப்புரம் நபர் கைது
ADDED : ஜன 27, 2025 05:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் ஜவகர் பால்பவன், தாவரவியல் பூங்கா வாசலில் வரிசையாக பழக்கடைகள் வைத்துள்ளனர். வியாபாரம் முடித்து விட்டு இரவு பழக்கடைகளை தார்பாய் மூலம் மூடி வைப்பர்.
இந்த பழக்கடைகளில் கடந்த பல நாட்களாக தினசரி ஒவ்வொரு கடையிலும் ரூ. 1,000 மதிப்புள்ள பழங்கள் திருடப்பட்டு வந்தது. தொடர்ந்து பல நாட்களாக ஒவ்வொரு கடையிலும் பழங்கள் திருடப்பட்டு வந்ததால், கடை வைத்திருக்கும் பெண்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். மர்ம நபர் தினமும் பழங்கை திருடி பிளாஸ்டிக் கூடையில் எடுத்து செல்லும் காட்சி பதிவானது.
புதிய பஸ் நிலைய பகுதியில் திருடிய பழங்களுடன் படுத்திருந்த விழுப்புரம் துரைசாமியை, 48; கைது செய்தனர். விசாரணையில், தினசரி திருடும் பழத்தை பஸ் நிலையம் அருகே பாதி விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

