/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்
/
பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்
பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்
பழனிசாமி பிரசாரத்தால் தொண்டர்கள் உற்சாகம்; உள்ளூர் பிரச்னையை பேசாததால் மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 14, 2025 03:53 AM
பழனிசாமியின் சூறாவளி பிரசாரத்தால், தென்னாற்காடு மாவட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புது உத்வேகம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்' என கடந்த 7ம் தேதி பிரசார பயணத்தை துவக்கி உள்ளார். இதில் கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள 20 சட்டசபை தொகுதிகளில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், மயிலம், செஞ்சி, கடலுார், பண்ருட்டி மற்றும் நெய்வேலி ஆகிய 9 தொகுதிகளில் ரோடு ேஷா மற்றும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
தொண்டர்கள் உற்சாகம்
பழனிசாமியின் இந்த பிரசார பயணத்தால், கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்வியால் துவண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டா போட்டி
மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதி செய்துள்ளதோடு, மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், எப்படியும் வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று அரியணை ஏறும் என்ற நம்பிக்கை நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொகுதிகளிலும் நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு பணத்தை தண்ணீராக செலவிட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், தேர்தலில் 'சீட்' பெற்றிட தற்போதே கட்சி தலைமைக்கு தங்கள் பலத்தை நிரூபிக்க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு, மக்களை அழைத்து வந்திருந்ததை காணமுடிந்தது.
பழனிசாமி 'குஷி'
குறிப்பாக, பண்ருட்டி, விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம் போன்ற கிராமங்கள் அதிகம் கொண்ட தொகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பண்ருட்டியில் மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா தரப்பினர் போட்டி போட்டுக் கொண்டு செய்திருந்த வரவேற்பு ஏற்பாடுகளையும், திரட்டியிருந்த மக்கள் கூட்டத்தை கண்ட பழனிசாமி உற்சாகமடைந்து, அடுத்தது அ.தி.மு.க., ஆட்சிதான். இதற்கு பண்ருட்டியே சாட்சி என்றார்.
பெண்கள் உற்சாகம்
பிரசார பயணத்தில் பழனிசாமி, விவசாயிகளின் பிரச்னைகள், நுாறு நாள் வேலை திட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்து பேசுகையில் கிராமப்புற பெண்கள் ஆமோதித்து வரவேற்றது, பழனிசாமியை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.
உள்ளூர் பிரச்னை 'மிஸ்சிங்'
பழனிசாமி பேசுகையில் தி.மு.க.,வையும், தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினை மட்டுமே விமர்சனம் செய்தார். தி.மு.க., ஆட்சியில் விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, தி.மு.க., ஆட்சியில் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் என்று குற்றம் சாட்டியும், ஊழல் புகார்கள் குறித்து புள்ளி விபரம் இல்லாததால், கூட்டத்தினருக்கு சலிப்பு தட்டியது.
மாநில பிரச்னைகளை பேசினாலும், அந்தந்த தொகுதியில் உள்ள பிரதான பிரச்னைகள் மற்றும் உள்ளூர் அரசியல் குறித்து பேசாதது மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடலுாரில் மட்டுமே உள்ளூர் பிரச்னையான துறைமுக விரிவாக்கம், புதிய பஸ் நிலைய விவகாரங்களை பேசினார்.
கூடும் செல்வாக்கு
பழனிசாமியின் இந்த முதல் சுற்று பிரசார பயணம், கட்சி நிர்வாகிகள் மத்தியில் புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமியை வரவேற்க கட்சியினர் செய்த ஏற்பாடுகள் மக்களிடையே மீண்டும் அ.தி.மு.க.,வின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
நமது நிருபர்கள்