ADDED : ஏப் 03, 2026 11:02 PM

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சட்டசபை தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பேசுகையில், 'திருநங்கைகள் அனைவரும் தவறாமல் ஓட்டு அளித்திட வேண்டும். வேட்பாளர்களின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள கே.ஓய்.சி., செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் திருநங்கைகள் சிலர் ஓட்டு அளிக்க தவறி விட்டனர். ஆனால், இம்முறை அது மாதிரி இல்லாமல் அனைவரும் அவசியம் ஓட்டு அளித்து 100 சதவீத ஓட்டுப்பதிவினை அடைந்த, மாவட்டமாக புதுச்சேரியை உருவாக்கிட அனைவரும் உதவி புரிந்திட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், திருநங்கைகள் சமூகத்தில் உள்ள அனைவரும் அவசியம் ஓட்டு அளிப்போம் என, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில், 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தது.
