ADDED : மார் 28, 2026 05:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு கடந்த 16ம் தேதி முதல் 23ம் தேதிவரை மனுத்தாக்கல் பெறப்பட்டது.
இத்தேர்தலுக்காக, இண்டி கூட்டணி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே துவங்கிய தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இரு வார இழுபறிக்கு பின் மனு தாக்கலுக்கு இறுதி நாளில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்.-16; தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள்14 என, ஒப்பந்தமானது.
அதன்பிறகு தி.மு.க., போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலையும், வி.சி.,க்கு ஒதுக்கீடு தொகுதியை 24ம் தேதி வெளியிட்டது. ஆனால், காங்., கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
ஆனால், இண்டி கூட்டணி கட்சியினர் முன்னெச்சரிக்கையாக அவரவர் விரும்பிய தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்தனர். அதில், காங்., மனு தாக்கல் செய்த 22 தொகுதிகளிலும் 'பி' படிவம் இணைத்திருந்ததாலும், மனுக்கள் வாபஸ் பெறாததால், அனைவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் டோலி சர்மா கூறுகையில், கட்சியின் 'பி' படிவம் பெற்ற அனைவரும் காங்., வேட்பாளர்கள் தான். 6 தொகுதிகளில் 'நட்பு' ரீதியில் காங்., வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்றார்.
இந்நிலையில், புதுச்சேரி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் காங்., கட்சி மண்ணாடிப்பட்டு, ஊசுடு(தனி), இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம்(தனி), நெட்டப்பாக்கம் (தனி), நெடுங்காடு (தனி), திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, மாகி மற்றும் ஏனாம் ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் நீண்ட ஆலோசனைக்கு பின் நேற்று வெளியிட்டார்.
கட்சியின் மேலிட செய்தி தொடர்பாளர், 'கட்சியின் 'பி' படிவம் பெற்ற அனைவரும் எங்கள் வேட்பாளர்கள் தான் என கூறினார்.
ஆனால், மாநில தலைவர் 16 தொகுதிகளில் போட்டியிடுபவர் கள் மட்டுமே காங்., கட்சி யின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என கூறியுள்ளார்.
இதில், யார் கூறுவதை ஏற்பது என தெரியாமல் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
