/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டம் சொல்வது என்ன?
/
நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டம் சொல்வது என்ன?
ADDED : டிச 20, 2024 03:49 AM
புதுச்சேரி: சபாநாயகர் மீது சுயேச்சை எம்.எல்.ஏ., கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் உடனடியாக விவாத்திற்கு வர வாய்ப்பில்லை என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சபாநாயகர் செல்வம் மீது, சுயச்சை எம்.எல்.ஏ., நேரு, நேற்று நம்பிக்கையில்லை தீர்மானம் கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து சட்டம் சொல்வது என்ன?
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றால், சபை தொடங்குவதற்கு 16 நாட்களுக்கு முன் மனு கொடுக்க வேண்டும். சபை நடக்கும் நாளில், இந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்து, தீர்மானம் கொண்டு வந்த எம்.எல்.ஏ.,வை பேச அழைப்பார்.
அதைத் தொடர்ந்து, அந்த தீர்மானத்தை மொத்த உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கினர் (அதாவது 7 எம்.எல்.ஏ.,க்கள்) ஆதரித்தால் மட்டுமே விவாதம் நடத்தப்படும். விவாத முடிவில் ஓட்டெடுப்பு நடத்தி, அதில், அதிக உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தால் மட்டுமே, சபாநாயகர் பதவி இழப்பார். 7 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என்றால், விவாதத்திற்கு முன்பே தள்ளுபடி செய்யப்படும்.
தற்போது, சட்டசபையில், என்.ஆர்.காங்.,10; பா.ஜ.,-6; தி.மு.க.,-6; சுயேச்சை-6; காங்., -2 மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் 3 என மொத்தம் 33 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
நேரு எம்.எல்.ஏ., கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க., மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தால் மட்டுமே விவாதத்திற்கு ஏற்க வாய்ப்பு உள்ளது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனால், வரும் பிப்ரவரி மாதம் வரை சபை கூட வாய்ப்பில்லை என்பதால், இத்தீர்மானம் உடனடியாக சட்டசபையில் விவாதிக்க வாய்ப்பில்லை.