/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் அறிவித்த உதவித் தொகை உயர்வு... எப்போது; குடும்ப தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
/
முதல்வர் அறிவித்த உதவித் தொகை உயர்வு... எப்போது; குடும்ப தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
முதல்வர் அறிவித்த உதவித் தொகை உயர்வு... எப்போது; குடும்ப தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
முதல்வர் அறிவித்த உதவித் தொகை உயர்வு... எப்போது; குடும்ப தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 23, 2025 03:54 AM

புதுச்சேரி: சட்டசபையில் முதல்வர் அறிவித்த உதவித் தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என, எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் எழுந்துள்ளது.
முதல்வர் ரங்கசாமி கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசின் எந்த துறைகளிலும் மாதாந்திர உதவித் தொகை பெறாத 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் (சிவப்பு ரேஷன் கார்டு) உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என, அறிவித்தார்.
இவ்வறிவிப்பு பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அப்போதைய கவர்னர் தமிழிசை முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 17 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட இந்த உதவித் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து மாதங்களில் 56 ஆயிரமாக உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி பட்ஜடெ் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை, மேஜையை தட்டி வரவேற்ற அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள ஏழ்மை நிலையில் உள்ள குடும்ப தலைவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்த முதல்வர், சிவப்பு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசி, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்குவதுபோல், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள, அரசின் எந்தவித உதவித்தொகை பெறாத வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என, அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு பல்வேறு மகளிர் அமைப்புகள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, பெண்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்ற இத்திட்டத்தை எதிர்வரும் சட்டசபை தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சட்டசபை அறிவிப்பை, சட்டசபை உறுதிமொழிக் குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே, சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களின் உதவித் தொகையை உயர்த்தவும், மஞ்சள் ரேஷன் கார்டிற்கு புதிதாக உதவித் தொகை வழங்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் கோப்புகள் தயாரித்து, துறை அமைச்சர் மூலமாக நிதித்துறை மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரின் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர், முதல்வர் வழியாக கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, அரசாணை வெளியிட்ட பிறகே திட்டத்தை செயல்படுத்த முடியும்.
இந்த நடைமுறைகளை செய்து முடிக்க குறைந்தது 2 மாதங்களுக்கு மேலாகும் என்பதால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, முதல்வரின் அறிவிப்பிற்கு ஒப்புதல் பெறுவதற்காக, இரண்டு வாரங்களுக்குள் சட்டசபை உறுதிமொழி குழு கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதவித் தொகை உயர்வு அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என, குடும்ப தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.