தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா அமைவது எப்போது: வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்

புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா அமைவது எப்போது: வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்

புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா அமைவது எப்போது: வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்


ADDED : நவ 23, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், படித்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க அரசு இனியாவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

கல்வி கேந்திரமாக விளங்கும் புதுச்சேரியில் பொறியியல் கல்லுாரிகளுக்குப் பஞ்சமில்லை. ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், 14-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. இதுதவிர ஏராளமான கலை, அறிவியல் கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். ஆனால், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் புதுச்சேரியில் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு உள்ளூரில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால், பலரும் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், ஓரிரு அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானால்கூட பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. அரசு வேலை என்பது அனைவருக்கும் கிடைத்துவிட முடியாது. எனவே, தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் புதுச்சேரிக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அரசு அவ்வப்போது திட்டங்களைத் தீட்டி வருகிறது. ஆனால், ஆட்சி மாறினாலும் இந்த நிலை மட்டும் மாறவில்லை. புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா அமைக்கும் திட்டம் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை அளவிலேயே முடங்கிவிடுகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அதன்பிறகு, 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ்–பா.ஜ., கூட்டணி அரசும் ஐ.டி., பூங்கா அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்று பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை அந்த முயற்சி கைகூடவில்லை.

தற்போதும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றனவே தவிர, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் கண்கூடாகத் தெரியவில்லை. அறிவிப்புகளும் ஆலோசனைகளும் மட்டும் இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது. திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதே அவர்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

ஐ.டி., பூங்காக்களைக் கொண்டுவருவதற்கு இடப்பற்றாக்குறையும் தடையாக இல்லை. நகரின் மையப்பகுதியிலேயே ஏ.எப்.டி., மற்றும் சுதேசி மில் வளாகங்களுக்குச் சொந்தமான இடங்கள் தாராளமாக உள்ளன. இந்த இடங்களைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க முடியும். ஏற்கெனவே தொழிற்சாலைகளாகச் செயல்பட்ட இடங்களைப் பயனுள்ள வகையில் மாற்றி அமைப்பதன் மூலம், நகரின் வளர்ச்சிக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்க முடியும்.

ஐ.டி., பூங்காக்கள் அமைந்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மறைமுக வேலைவாய்ப்புகளும் பெருகும். பணப்புழக்கம் அதிகரித்து, போக்குவரத்து, வாடகை வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் வளர்ச்சி அடையும். இதனால் புதுச்சேரியின் பொருளாதாரமும் புதிய உத்வேகம் பெறும். படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலையும் ஓரளவுக்குக் குறையும்.

சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும் பாதிக்காத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதுச்சேரியில் அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அந்த வகையில், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை. நிலத்தடி நீரையும் அதிக அளவில் உறிஞ்சாதவை. எனவே, முதல்வரின் அறிவிப்புக்கும் ஐ.டி., பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கும் முரண்பாடு இல்லை.

புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் காட்டப்படும் அக்கறை, படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிவிட்டு, அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, ஐ.டி., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு நின்றுவிடாமல், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். திட்டங்களை அறிவிப்பதைக் கடந்து, அவற்றைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய தருணம் இது. புதுச்சேரி இளைஞர்கள் வேலை தேடி வெளியேறும் நிலை மாறி, வேலைவாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us