/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேரளாவில் பஸ் இயக்கியபோது பி.ஆர்.டி.சி., டிரைவருக்கு நெஞ்சுவலி ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்
/
கேரளாவில் பஸ் இயக்கியபோது பி.ஆர்.டி.சி., டிரைவருக்கு நெஞ்சுவலி ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்
கேரளாவில் பஸ் இயக்கியபோது பி.ஆர்.டி.சி., டிரைவருக்கு நெஞ்சுவலி ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்
கேரளாவில் பஸ் இயக்கியபோது பி.ஆர்.டி.சி., டிரைவருக்கு நெஞ்சுவலி ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்
ADDED : ஜன 12, 2025 05:02 AM
புதுச்சேரி: மாகி சென்ற பி.ஆர்.டி.சி., பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பஸ்சை ஓரமாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றினார். டிரைவரை உடனடியாக அருகில் உள்ள கேரளா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, 49 பயணிகளுடன் புதுச்சேரி அரசின் பி.ஆர்.டி.சி., பஸ் மாகிக்கு புறப்பட்டு சென்றது.
நேற்று காலை 5:00 மணிக்கு, கேரள மாநிலம் மலப்புரம் அருகே பஸ் சென்றபோது, புதுச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி, சக டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் நெஞ்சுவலி தகவலை தெரிவித்தார்.
மாற்று டிரைவர் குணசேகரன், கண்டக்டர் ஞானவேல் உடனடியாக பஸ்சை அருகில் இருந்த மலப்புரம் மாவட்ட கூட்டுறவு துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டிரைவர் ஆறுமுகத்தை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனையில், ஆறுமுகத்திற்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிகிச்சை துவங்கி 'ஆஞ்சியோ' செய்தபோது, இதய ரத்த நாளங்களில் 2 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
டிரைவர் ஆறுமுகத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு, பி.ஆர்.டி.சி., பஸ் மாகி புறப்பட்டு சென்றது.
டிரைவர் ஆறுமுகம் மலப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பி.ஆர்.டி.சி., நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மேலாண் இயக்குநர் சிவக்குமார், உதவி மேலாளர் குழந்தைவேலு, பொதுமேலாளர் கலியபெருமாள், இஸ்மாயில் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, மருத்துவ சிகிச்சைக்கான செலவு நிர்வாகத்தின் மூலம் வழங்க முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனையை தொடர்பு கொண்ட பி.ஆர்.டி.சி., நிர்வாகம், டிரைவர் ஆறுமுகத்திற்கான மருத்துவ செலவு முழுதும் உடனடியாக செலுத்துவதாகவும், உயர் தர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று ஆறுமுகத்திற்கு சிகிச்சை நடந்து வருகிறது.

