/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வெள்ளக்காடானதற்கு யார் காரணம்?
/
புதுச்சேரி வெள்ளக்காடானதற்கு யார் காரணம்?
ADDED : அக் 23, 2025 01:08 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மழை பாதிப்பில் கற்ற பாடத்தை கொண்டு, எதிர்வரும் மழை பாதிப்புகளை தவிர்க்க அரசும், அதிகாரிகளும் விரைந்து செயல்பட வேண்டும்.
புதுச்சேரியில், மழை பெய்தாலே தாழ்வான குடியிருப்பு மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. இந்த மழை நீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவ்வாறு, இந்திரா சிக்னல், பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் மழைநீர் தேங்குவதை தடுக்க பெரம்பையில் இருந்து வரும் மேட்டு வாய்க்காலில் பாவாணர் நகர் அருகே தடுப்பு அமைத்து, பெருக்கெடுத்து வரும் மழை நீரை உழந்தை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி வழியாக அரியாங்குப்பம் ஆற்றில் திருப்பி விட்டனர்.
அதேபோன்று, லாஸ்பேட்டை மேட்டில் இருந்து வரும் தண்ணீரால் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் தத்தளிப்பதை தடுக்க இ.சி.ஆர்., விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி அருகே கிணறு அமைத்தனர். லாஸ்பேட்டையில் இருந்து வரும் மழைநீரை, கிணற்றில் சேகரித்து, அங்கிருந்து 3 ராட்சத மோட்டார்கள் மூலம் கொக்குபார்க் சிக்னலில் உள்ள வாய்க்காலில் விடப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்திரா சதுக்கம் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டுவாய்க்காலில் பாவாணன் நகர் அருகே தடுப்பு ஏற்படுத்தியதால், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து அரியாங்குப்பம் ஆற்றுக்கு திருப்பி விடுவதாக கூறி அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, தடுப்பை உடைக்க வலியுறுத்தினர்.
வேறு வழியின்றி, அதிகாரிகள் மேட்டுவாய்க்கால் தடுப்பை உடைக்காமல் திறந்து வைத்துள்ளனர். இதனால், நேற்று முன்தினம் பெய்த கனமழையில், மேட்டுவாய்க்காலில் பெருக்கெடுத்த மழை நீர், கனகன் ஏரி உபரி நீருடன் சேர்ந்து இந்திரா சதுக்கத்தை குளமாக்கியது.
அதேபோன்று குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால், லாஸ்பேட்டையில் வடக்கு பகுதியில் இருந்து பெருக்கெடுத்த மழை நீர், இ.சி.ஆர்., தெற்கு பகுதியில் அமைத்துள்ள கிணற்றில் வடிய நேரமானதால், வடக்கு பகுதியில் குளமாக தேங்கியது.
இதனால், சென்னை மார்க்க போக்குவரத்து தடைப்பட்டது. மேலும், இ.சி.ஆரை ஒட்டிய வடக்கு பகுதி குடியிருப்புகளில் மழைநீர் சூழும் நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி அதிகாரிகள் இ.சி.ஆர்., சென்டர் மீடியனில் இரு இடங்களில் உடைத்து, வடக்கு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். இதனால் கிருஷ்ணா நகர் மற்றும் ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடானது.
துவக்கமே அமர்க்களம் புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 செ.மீ., மழை பெய்ததால், பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழையில் இது துவக்கமே. இன்னும் 2 மாதங்கள் மழைக்காலம் உள்ளது. மேலும், புதுச்சேரியில் கடந்தாண்டு பெஞ்சல் புயலின்போது ஒரே நாளில் 43 செ.மீ., மழை பெய்து வெள்ளக்காடனது . எனவே, நேற்று முன்தினம் ஏற்பட்ட அனுபவத்தை பயன்படுத்தி, வரும் காலங்களில் அந்த பாதிப்புகளை தவிர்க்க அரசும், அதிகாரிகளும் தயாராக வேண்டியது அவசியம்.
அரசியல் அழுத்தம் மழை பாதிப்பில் இருந்து மக்களை காத்திட பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்டங்களை முறையாக செயல்படுத்தி இருந்தால், நேற்றைய பாதிப்பை தவிர்த்திருக்கலாம். ஆனால், உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் நிர்பந்தத்தால், மேட்டுவாய்க்கால் தடுப்பை அடைக்காததும், இ.சி.ஆரில், சென்டர் மீடியனில் இரு இடங்களில் உடைப்பை ஏற்படுத்தியதும் தான் பாதிப்பிற்கு காரணம்.