/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை
/
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் யார்? மேலிட தலைவர்கள் இன்று ஆலோசனை
ADDED : ஜன 18, 2024 04:03 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, காங்., மேலிட தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி அரசியல் வட்டாரம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., - என்.ஆர். காங்., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளரை நிறுத்த உள்ளது.
அதுபோல, காங்., - தி.மு.க., கூட்டணியில் காங்., போட்டியிடுவது உறுதியாகி விட்டது. தமிழகத்தை பின்பற்றி அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுடன் மூன்றாவது அணியாக களம் இறங்க உள்ளது.
காங்., கட்சியை பொறுத்தவரை, கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாக உள்ள வைத்திலிங்கம், மாநில காங்., தலைவராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் காங்., கட்சியில் போட்டியிட மூத்த நிர்வாகிகள் பலரும் சீட் கேட்கின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்., கட்சியின் வேட்பாளர் தேர்வு குழுவின் தலைவர் ஹரிஷ் சவுத்ரி நேற்று புதுச்சேரி வந்துள்ளார்.
அவரை தொடர்ந்து, புதுச்சேரிக்கான காங்., பொறுப்பாளர் அஜோய்குமாரும் இன்று புதுச்சேரிக்கு வருகிறார். பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அஜோய்குமார் முதன்முதலாக புதுச்சேரிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்கும் அஜோய்குமார், ஹரிஷ் சவுத்ரி ஆகியோர், வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து உள்ளூர் காங்., நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கின்றனர்.
இதையடுத்து, புதுச்சேரி காங்., கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். தங்களுக்கு சீட் கேட்டு வலியுறுத்த திட்டமிட்டுள்ளதால், காங்., வட்டாரத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் பணிகளை காங்., முந்தி கொண்டு துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.