ADDED : மார் 20, 2026 07:35 AM
புதுச்சேரி: இக்கட்டான நேரத்தில் முதல்வர் ஊர் சுற்றிக் கொண்டிருப்பது அவது விளையாட்டு தனத்தையே காட்டுவதாக ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறினார்.
தே.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்த புதுச்சேரி பா.ஜ., மாநில தேர்தல் பொறுப்பாளரான மான்சுக் மாண்டவியாவை, தனியார் ஓட்டலில் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நிருபர்களிடம் கூறியதாவது;
தே.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேசியுள்ளேன். இருப்பினும் தொடர்ந்து குளறுபடி நிலவி வருகிறது. மனு தாக்கலுக்கு போதிய கால அவகாசம் இல்லை. நாங்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதனால், முடிவை விரைவாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
கூட்டணி குறித்து முதல்வர் தான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் ஊர் சுற்றி கொண்டிருப்பது, அவரது விளையாட்டு தனத்தை காட்டுகிறது. காத்துக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் முடிவை தெரிவித்துவிட்டால், எங்கள் வேலையை பார்க்க முடியும். நாங்கள், அனைத்திற்கும் தயாராக உள்ளோம். முதல்வர், பயத்தின் காரணமாக எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற சொல்வதாக சொல்கின்றனர். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை.
தற்போது எங்களுக்கு நேரம் இல்லாததால், உடன் இருப்பவர்கள் மனு தாக்கலுக்கு தயார் நிலையில் உள்ளனர். சீக்கிரமாக முதல்வர் ஊர் திரும்பி, சில முக்கிய முடிவுகளை எடுத்தால் நன்றாக இருக்கும். புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன். அவருடைய உறவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்வேன்.
மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளோம். அரசியலில் புதிதாக வரும்போது, புதிய கட்சிக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததற்கு பெருமை படுகிறேன். தேர்தல் ஆணையம் குறுகிய காலத்தில் எங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கியுள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பேச்சுவார்தை முதல்வரின் கையில் தான் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அவர் சீக்கிரம் முடிவு எடுத்து தெரிவித்துவிட்டால், அடுத்த வேலைகளை செய்ய ஈசியாக இருக்கும். பா.ஜ., எங்களுக்கு ஆதரவாக இருந்து மரியாதை அளித்து வருகிறது. கூட்டணி இருந்தால் நல்லது. இல்லை என்றால் மிகநல்லது என்றார்.
