/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா? முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா?
/
முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா? முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா?
முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா? முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா?
முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா? முந்திரி ஏற்றுமதி மண்டலம் பண்ருட்டியில் ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஜன 26, 2025 04:37 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும் என முந்திரி விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவில் வெப்ப மண்டல நாடுகளான தென்ஆப்பிரிக்கா, வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் கடலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.
கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் 28,500 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் அளவு முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் முந்திரி உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.99 சதவீதம் ஆகும்.
அதே வேளையில், தென் ஆப்பிரிக்கா, கானா, ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை இறக்குமதி செய்து பதப்படுத்தப்பட்டு, முந்திரி பயிர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2003 வரை, முந்திரி ஏற்றுமதியில் கடலுார் மாவட்டம், பண்ருட்டி முதலிடத்தில் இருந்தது. தற்போது வியட்நாம் முந்திரி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முந்திரி ஏற்றுமதியில் அன்னிய செலாவணி ஈட்டியது. இது படிப்படியாக குறைந்து, கடந்த ஆண்டு 2 ஆயிரம் கோடி அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.
இதற்கு முந்திரி உற்பத்தி சரிந்ததே முக்கிய காரணமாகும். கடந்த 2011ல் தானே புயலுக்கு பின் முந்திரி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. எனவே முந்திரி சாகுபடியை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முந்திரி உற்பத்தியை அதிகரிக்க பழைய முந்திரி மரக்கன்றுகள் அகற்றி புதிய வி.ஆர்.ஐ.-3 ஒட்டுரக கன்றுகள் வழங்கிட வேண்டும். புதிய ஒட்டுரக கன்றுகள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, அவை வளர்ந்து பலன்தரும் வரையில் கன்றுகளை பராமரிக்க மான்யம் திட்டமும் செயல்படுத்திட வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் ஆர்வத்துடன் வி.ஆர்.ஐ.-3 ஒட்டுரக கன்றுகளை நவீன தொழில்நுட்பத்தில் நடவு செய்து உற்பத்தியை அதிகரிக்க செய்வர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2010ல் ஏற்படுத்தப்பட்ட முந்திரி ஏற்றுமதி மையம் தனியாருக்கு குத்தகை விடப்பட்டு, அங்கு தனியார் கம்பெனி மட்டும் இயங்கியது. தற்போது அதுவும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு பண்ருட்டியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பண்ருட்டியில் வேளாண் முந்திரி ஏற்றுமதி மண்டலம் உருவாக்கினால், ஏற்றுமதி செய்பவர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளரும், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் உறுப்பினருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது:
உள்நாட்டு முந்திரி உற்பத்தியை அதிகரிக்க, மானிய உதவியுடன் கூடிய வேளாண் திட்டம் அறிவிக்க வேண்டும். வியட்நாம் போன்ற நாடுகளின் அதிக இயந்திரமாக்கல் முறையில் நாம் பின்தங்கி உள்ளதால் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.
அதனை சரி செய்ய, இயந்திரங்களுக்கு அதிக அளவில் மானிய தொகை வழங்க வேண்டும். மூலப்பொருட்களான முந்திரி கொட்டைகளை இறக்குமதி செய்வதில் கடுமையான விதிமுறைகளால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
அயல்நாடுகளில் இருந்து போலியான பெயரில் குறைந்த விலையில் முந்திரி பருப்புகள் நேரடியாக இறக்குமதி செய்வதை அரசு கண்டறிந்து, தடுக்க வேண்டும். குறைக்கப்பட்ட ஏற்றுமதி ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். முந்திரி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.