கார்கே, ராகுல் பிரசாரம் தி.மு.க., பங்கேற்குமா? புதுச்சேரியில் புது குழப்பம்
கார்கே, ராகுல் பிரசாரம் தி.மு.க., பங்கேற்குமா? புதுச்சேரியில் புது குழப்பம்
ADDED : ஏப் 03, 2026 08:31 PM

புதுச்சேரி:இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காங்., தேசிய தலைவர் கார்கே, நாளை மறுநாள் 6ம் தேதி ராகுல் ஆகியோர் செய்யும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இண்டி கூட்டணி புதுச்சேரியில் கடும் குழப்பங்களுடன் தேர்தலை சந்திக்கிறது. காங்., -16, தி.மு.க.,- 13, வி.சி., -1 என, 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், தனியாக நிற்போம் என்ற எண்ணத்தில் காங்., சார்பில் அவசர, அவசரமாக கூடுதலாக 6 தொகுதிகளில் 'பி'பார்ம் வழங்கியதால், அந்த தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து காங்., கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதனால் கடும் எரிச்சலான கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., உழவர்கரை தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறது. வி.சி.க.வினர் இண்டி கூட்டணியில் உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடி அருகில், இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காங்., தேசிய தலைவர் கார்கே, நாளை மறுநாள் ராகுல் ஆகியோர் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடக்கிறது இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
