/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 போகங்களுக்கு காப்பீட்டு தொகை... கிடைக்குமா? நெல் பயிரிட்ட விவசாயிகள் தவிப்பு
/
5 போகங்களுக்கு காப்பீட்டு தொகை... கிடைக்குமா? நெல் பயிரிட்ட விவசாயிகள் தவிப்பு
5 போகங்களுக்கு காப்பீட்டு தொகை... கிடைக்குமா? நெல் பயிரிட்ட விவசாயிகள் தவிப்பு
5 போகங்களுக்கு காப்பீட்டு தொகை... கிடைக்குமா? நெல் பயிரிட்ட விவசாயிகள் தவிப்பு
ADDED : பிப் 12, 2025 03:43 AM

புதுச்சேரி: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை வேளாண்துறை முறையாக செயல்படுத்தாததால், 5 போகங்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
'பிரதமரின் பசல் பீமா யோஜனா' என்ற மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016--17ம் ஆண்டு முதல் புதுச்சேரி வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகள் தலா ஒரு பங்கு, செலுத்த வேண்டும். இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் விவசாயிகளின் பங்கை மாநில அரசே செலுத்துகிறது.
நெற்பயிரில் மாதிரி அறுவடை செய்து இழப்பீட்டுத் தொகை கணக்கிட்டு 21 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும்.
கடந்த சம்பா 2021 மற்றும் சொர்ணவாரி 2022ம் ஆண்டு ஏற்பட்ட பயிர் இழப்பீட்டிற்கு இழப்பீட்டுத் தொகை ஐந்து மாதத்திற்கு முன் தான் விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. அது அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எந்தெந்த விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.
உழவர் உதவியகத்தை அணுகி விவசாயிகள் விவரங்கள் கேட்டால் அவர்களுக்கும் எந்த விவரமும் வேளாண் துறை தலைமையகத்தில் செயல்படும் பயிர் காப்பீட்டு பிரிவு தகவல் தரவில்லை என்கின்றனர்.
பயிர் காப்பீடு இழப்பீட்டு பணம் செலுத்தப்படும் விவரமே, விவசாயிகள் சொல்லித்தான் வேளாண் அலுவலர்களுக்கு தெரிய வருகிறது என்பது கசப்பான உண்மை. இது ஒருபுறமிருக்க, சம்பா 2022, சொர்ணவாரி 2023, சம்பா 2023, நவரை 2024 மற்றும் சொர்ணவாரி 2024 ஆகிய பருவத்தில் சாகுபடி செய்த நெல்லுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை உண்டா என்ற விவரம் எதுவும் தெரியாமல் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராமமும் தனித்தனியாக கருதப்படுவதால் ஏதேனும் ஒரு சில கிராமங்களில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இழப்பீடு இல்லை என்றாலும் அதன் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இத்திட்டமானது ஆரம்பத்தில் இருந்தே குளறுபடியாக செயல்படுத்தப்படுகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இத்திட்டத்தில், விவசாயிகள் பணம் செலுத்தாத ஒரே காரணத்துக்காக, விவசாயிகளிடம் வேளாண்துறை அலட்சியமாக நடந்து கொள்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய அரசின் பயிர்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வைக்கின்றனர்:
வருவாய் கிராமம் வாரியாக, கடந்த 10 ஆண்டு நெல் மகசூல் விவரம், ஒவ்வொரு பருவத்திலும் மாதிரி அறுவடை செய்யப்படும் நிலத்தின் சர்வே எண் மற்றும் விவசாயி பெயர் உள்ளிட்ட விபரங்கள், மாதிரி அறுவடை முடிந்த பின் மகசூல் மற்றும் இழப்பீட்டுத் தொகை விபரங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், இதனை வேளாண்துறை இணையதளம் மற்றும் அனைத்து உழவர் உதவியகங்களிலும் வெளியிட வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்வதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட கலெக்டர் தலைமையிலான குழுவின் கூட்டம் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அதற்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.