/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு... மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்குது
/
சென்டாக் ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு... மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்குது
சென்டாக் ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு... மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்குது
சென்டாக் ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு... மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்குது
UPDATED : மே 05, 2025 08:57 AM
ADDED : மே 05, 2025 05:22 AM

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கையை நடைமுறைகளை சென்டாக் ஒருவழியாக துவங்கிவிட்டது.
மாணவர்கள் உயர் கல்வி சேர்க்கைக்கு எடுக்க வேண்டிய குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் எடுக்க வேண்டிய கட் ஆப் தேதியை வெளியிட்டுவிட்டது. இதனால் சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் நாட ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ள சூழ்நிலையில் குவிந்து வரும் மாணவர் கூட்டத்தை கண்டு வருவாய் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.கையிலே தீர்வு இருந்தும் அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு இல்லாததால் மாணவர்கள் அலைகழிப்பு ஒவ்வொரு ஆண்டும் தொடருகின்றது.
மாணவர் சேர்க்கை நடைமுறையினை விரைவுப்படுத்தவும், சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும் சென்டாக் திட்டமிட்டது. இதற்காக வருவாய் துறையினருடன் ஒருங்கிணைந்த இணைய வசதியை வடிமைத்து, இந்த இணைய வசதி வருவாய் துறையினர் முன்னிலையில் பரிசோதிக்கும் முயற்சியை கடந்த 2023 ம் ஆண்டே சென்டாக் துவங்கியது. ஒரு வழியாக தொழில்நுட்ப பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
ஆனால், வருவாய் துறை கூறியுள்ள சில ஆலோசனை தொழில்நுட்பத்தில் இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. இதன் காரணம் ஒருங்கிணைந்த சான்றிதழ் விநியோகம், சரிபார்ப்பு எல்லாமே கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வராமல் கானல் நீராகிவிட்டது.இதனால் தான் கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? என்று வருவாயை துறை, சென்டாக்கினை பெற்றோர், மாணவர்கள் பெற்றோர் சங்கங்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் மாணவர் சேர்க்கை உடனடியாக முடிந்துவிடுகின்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் மட்டும் மாணவர் சேர்க்கை ஜவ்வாக பல மாதமாக இழுத்து கொண்டு இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு சான்றிதழ் சரிபார்ப்புமும் ஒரு காரணம்.ஒவ்வொரு ஆண்டும் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்காக வருவாய் துறை மூலம் 20,000 ஆயிரம் சான்றிதழ்கள் வினியோகிக்கப்படுகிறது. இதில் 80 சதவீத சான்றிதழ்கள் சென்டாக் உயர் கல்வி சேர்க்கைக்காக சமர்பிக்கப்படுகின்றது. சமர்பிக்கப்படும் இந்த சான்றிதழ்கள் மீண்டும் மீண்டும் வருவாய் துறையினர் ஆய்வு செய்யும்போது சென்டாக் மாணவர் சேர்க்கையில் தேவையற்ற காலதாமத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற சூழ்நிலையில், ஒருங்கிணைந்த சான்றிதழ் விநியோகம், சரிபார்ப்பு பல நடைமுறை பிரச்னைகளை தீர்க்கும்.
மாணவர்கள், அதிகாரிகளின் அலைச்சலான நடைமுறையை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதியை அரசு இறுதி வடிவம் கொடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக இரு துறைகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை அரசு விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.