லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா? வாக்கிங் செல்லும் முதியவர்கள் பரிதவிப்பு
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா? வாக்கிங் செல்லும் முதியவர்கள் பரிதவிப்பு
ADDED : செப் 03, 2026 06:33 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் பொதுமக்கள் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், கடந்த காலங்களில் வாக்கிங் செல்வதற்கும், பொழுதுபோக்குவதற்கும் காலையிலும், மாலையிலும் கடற்கரை சாலைக்கு செல்வது வழக்கம். தற்போது, நிலைமை தலைக்கீழாக மாறி விட்டது.
லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. மாலையில் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்கிங் செல்வதற்கு வசதியாக மைதானத்தின் நடுவிலும், சுற்றிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு மைதானம் ஒளி வெள்ளத்தில் காட்சியளிக்கிறது.
மேலும், மைதானம் முழுவதும் அடிக்கடி துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு துாய்மையாகவும், சுகாதாரமாகவும் காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்தமாக, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு புதிய பொழுதுபோக்கு மையமாக ஹெலிபேடு மைதானம் உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, லாஸ்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் பொழுதுபோக்குவதற்காக குடும்பத்துடன் ஹெலிபேடு மைதானத்துக்கு வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சின்னஞ்சிறிய குழந்தைகள் ஜாலியாக விளையாடி மகிழ்கின்றனர். விளையாடுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் இளைஞர்களும் நாடி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், வாக்கிங் செல்வதற்காக முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஹெலிபேடு மைதானத்துக்கு காலையிலும், மாலையிலும் வருகின்றனர். ஆனால், வாக்கிங் செல்பவர்கள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு போதிய கட்டமைப்புகள் இல்லை. பொழுதுபோக்க வருபவர்கள் வசதியாக உட்கார்ந்து பேசுவதற்கும் வசதி இல்லை.
அதிகாலை பனியிலும், அந்தி சாயும் மாலையிலும் தளர்ந்த நடையோடு வரும் முதியவர்கள், கொஞ்சம் இளைப்பாறலாம் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எப்போதோ அமைக்கப்பட்ட சிமென்ட் இருக்கைகள் எல்லாம் பராமரிப்பு இல்லாமல் மண்ணுக்குள் புதைந்தும், சுக்குநுாறாக உடைந்தும் கிடக்கின்றன.
'தள்ளாத வயசுல இதுல எப்படிப்பா உக்கார்றது' என முதியவர்கள் பெருமூச்சு விடுகின்றனர். நடந்த களைப்பில் உட்காருவதற்கு இடமின்றி பரிதவித்து வருகின்றனர்.
வேறுவழி இல்லாமல், மைதானத்தை சுற்றியுள்ள சாலையோர மழைநீர் வடிகால் வாய்க்காலின் குறுகலான தடுப்புச் சுவரில் 'பேலன்ஸ்' செய்தபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு முதியவர்கள் உட்காருகின்றனர். கொஞ்சம் அசந்தால்... நேராக வடிகாலுக்குள் விழும் அபாயம் இருக்கிறது.
'சுகர், பி.பி.,யை குறைக்க நடப்பதற்காக வந்தால், இங்க உட்காருவதை நெனச்சாலே பி.பி., ஏறுதே' என முதியவர்கள் நொந்து கொள்கின்றனர்.
மைதானத்தில் வாக்கிங் செல்லும்போது சுகர், பி.பி., அளவு திடீரென குறைந்தாலோ, அதிகமானாலோ தலை கிறுகிறுத்து கால்கள் தடுமாறும். அதுபோன்ற நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொள்ள உடனடியாக உட்கார்ந்து விட வேண்டும். ஆனால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை இருக்கைகள் இல்லாதது நிலைமையை சிக்கலாக்கி உள்ளது. வாங்கிங் செல்பவர்கள் கூறுகையில், 'இருக்கைகள் உடைந்து கிடப்பதால், வேறு வழியின்றி ஆபத்தான மழைநீர் வடிகால் சுவரின் மீது உட்காருகிறோம். ஒவ்வொரு வாய்க்காலும் 4 அடி ஆழம் வரை இருக்கிறது.
சற்றே கால் தவறினாலும் அல்லது தலைசுற்றல் ஏற்பட்டாலும் வடிகால் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது' என்றனர்.
ஹெலிபேடு மைதானத்தை சுற்றிலும் உட்காருவதற்கு வசதியாக, வரிசையாக டபுள் கருங்கல் பெஞ்ச் அமைப்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 6 லட்சம் ரூபாய் செலவில்40 பெஞ்ச் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெஞ்ச் அமைக்கும் திட்டத்திற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக செயல்வடிவம் தர வேண்டும். அதுபோல, பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தர வேண்டும்.
