கைக்கிலப்பட்டு கிராமத்திற்கு தெரு விளக்குகள் அமைக்கப்படுமா
கைக்கிலப்பட்டு கிராமத்திற்கு தெரு விளக்குகள் அமைக்கப்படுமா
ADDED : ஏப் 23, 2026 11:37 PM
புதுச்சேரி: கொடாத்துார்- கைக்கிலப்பட்டு செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் அமைக்கப்படாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்த சுத்துக்கேணி- கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ. 34 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. மேம்பாலம் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வாகன போக்குவரத்து துவங்கிய பல ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரையில் முறைப்படி திறப்பு விழா செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இக்கிராமத்திற்கு இதுவரையில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் கொடாத்துார் வழியாக 2 கி.மீட்டர் தொலைவு நடந்து வந்து, முட்ராம்பட்டு காளியம்மன் கோவில் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் புதுச்சேரி மற்றும் திருக்கனுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கைக்கிலப்பட்டு கிராமத்தில் இருந்து கொடாத்துார் வரை உள்ள சாலையில் தெருமின் விளக்குகள் எதுவும் இதுவரையில் அமைக்கப்படவில்லை. இதனால், புதுச்சேரி, திருக்கனுார் பகுதிகளுக்கு சென்றுவிட்டு, இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் பெண்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், தெருமின் விளக்குகள் இல்லாததால், அப்பகுதி முழுதும் இருள்சூழ்ந்து திருட்டு, வழிபறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கும் சூழல் நிலவி வருகிறது.
எனவே, கொடாத்துார்- கைக்கிலப்பட்டு செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
