/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் விரைவில் 3 கட்சிகள் உதயம் பிரதான கட்சிகளின் வெற்றியை பாதிக்குமா?
/
புதுச்சேரியில் விரைவில் 3 கட்சிகள் உதயம் பிரதான கட்சிகளின் வெற்றியை பாதிக்குமா?
புதுச்சேரியில் விரைவில் 3 கட்சிகள் உதயம் பிரதான கட்சிகளின் வெற்றியை பாதிக்குமா?
புதுச்சேரியில் விரைவில் 3 கட்சிகள் உதயம் பிரதான கட்சிகளின் வெற்றியை பாதிக்குமா?
ADDED : செப் 14, 2025 01:45 AM
வி த்தியாசமான அரசியல் சூழலை கொண்டுள்ள புதுச்சேரியில், கட்சிகளின் செல்வாக்கைவிட, வேட்பாளரின் செல்வாக்கே பிரதானம். கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதியில், 6ல் சுயேச்சைகள் வெற்றி பெற்றதே இதற்கு உதாரணம்.
இதன் காரணமாகவே, வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக கடந்த ஓராண்டிற்கு மேலாக பல்வேறு தொகுதிகளில் பலர் ஆர்வமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்., -பா.ஜ.,; காங்.,-தி.மு.க., கூட்டணிகள் உறுதியான நிலையில், இதில் யார், யாருக்கு 'சீட்' கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், தேர்தலை கணக்கிட்டு மேலும் 3 புதிய கட்சிகள் உதயமாக உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் 5 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று, காங்., அரசில் இருமுறை அமைச்சராக இருந்தவரும், தற்போது புதச்சேரி அரசுக்கான டில்லி பிரதிநிதியாக உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ், வரும் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காண முடிவு செய்துள்ளார்.
இதற்காக , 'புதுச்சேரி மல்லாடி மக்கள் கட்சி' (பி.எம்.எம்.கே.,)என்ற பெயரில் புதிய கட்சி துவங்க ஏற்பாடு செய்து வருகிறார்.
இவர், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த போது செயல்படுத்திய திட்டங்களால், மீனவர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பை, ஓட்டாக மாற்றும் நோக்கில் கடற்கரை தொகுதிகளான ஏனாம், காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், அரியாங்குப்பம், ஏம்பலம், காரைக்கால் வடக்கு ஆகிய 7 தொகுதிகளை கணக்கிட்டு, மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து வருகிறார்.
புதுச்சேரி அரசியலில் குதித்துள்ள சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக ஜெ.சி.எம்., என்ற தனது சமூக நல அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இக்கட்சி சார்பில் வரும் தேர்தலில் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, பாகூர், உழவர்கரை, திருபுவனை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட வியூகங்கள் வகுத்து வருகிறார்.
அதேபோன்று, தற்போதைய உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, தான் நடத்தி வரும் மனித நேய மக்கள் சேவை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, அக்கட்சி சார்பில் வரும் தேர்தலில் தானும், தனது ஆதரவாளர்களையும் களமிறக்க முடிவு செய்துள்ளார்.
புதிதாக துவங்கப்படவுள்ள இந்த மூன்று கட்சிகளும், தற்போது தேர்தல் பணியாற்றி வருபவர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சியில் 'சீட்' கிடைக்காவிட்டால், அவர்களை தங்கள் கட்சி சார்பில் களமிறக்க உள்ளனர். இதனால், எதிர் வரும் தேர்தலில் பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்வியை இந்த மூன்று புதிய கட்சியிகளின் செயல்பாட்டை பொருத்தே அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.