/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாக்களின் சுற்றளவு குறைக்கப்படுமா?
/
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாக்களின் சுற்றளவு குறைக்கப்படுமா?
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாக்களின் சுற்றளவு குறைக்கப்படுமா?
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாக்களின் சுற்றளவு குறைக்கப்படுமா?
ADDED : அக் 08, 2025 07:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பிரதான சாலைகளில் உள்ள ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைக்க பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில், விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெருகியுள்ள வாகனப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் இல்லாத காரணத்தினால், நகரம் தினமும் போக்குவரத்து நெரிசலில் திண்டாடி வருகிறது.
குறிப்பாக, இந்திரா, ராஜிவ், வெங்கடசுப்ப ரெட்டியார் சிக்னல்களை கடப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது.
இந்த சிக்னல்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் உச்சக்கட்ட போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் பல கி.மீ., தொலைவிற்கு அணி வகுத்து நிற்கின்றன. பச்சை விளக்கு விழுந்து சிக்னலை கடப்பதற்குள் அடுத்த 'ரெட் சிக்னல்' விழுந்து விடுகின்றது. பல நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தே சிக்னலை கடக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தின் 'டெல்டா' மாவட்டங்களில் இருந்து தலைநகரான சென்னை செல்வோர் புதுச்சேரி இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.
இந்திரா சிக்னலில் 4 பிரதான சாலைகளும், ராஜிவ் சிக்னலில் 5 பிரதான சாலைகளும் சந்திக்கின்றன.
இந்திரா சிலையை சுற்றி நீரூற்று மற்றும் சிறு பூங்காவுடன் 22.86 மீட்டர் சுற்றளவிலும், ராஜிவ் சிலையை சுற்றி சிறு பூங்காவுடன் 19.14 மீட்டர் சுற்றளவிலும் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரவுண்டானா அமைத்த காலகட்டத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரிய ரவுண்டானாக்களால் பிரச்சனை எழவில்லை.
ஆனால், தற்போது, வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த ரவுண்டானாக்களில் சிக்னலில் நிற்கும் வாகனங்கள், உடனடியாக கடந்து செல்ல முடியவில்லை. இதனால் இந்த சிக்னல்களில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
ரவுண்டானாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை களை விரிவுப்படுத்த வேண்டும்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், தலைவர்களின் சிலைகளை சுற்றி அமைத்துள்ள ரவுண்டானாக்களின் சுற்றளவை குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.
ரவுண்டானாவில் சுற்றளவை குறைத்து, சாலையை விசாலமாக்கினால் போக்குவரத்தை நெரிசலை தடுக்க முடியும். அது மட்டுமே நிரந்தர தீர்வு.
அப்போது தான் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் இந்த சிக்னல்களை சிரமமின்றி விரைவாக கடந்து செல்ல முடியும். இதற்கு பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்.,
முன் வருமா?
மக்கள் நலன் கருதி, காங்., கட்சி ரவுண்டானா சுற்றளவை குறைக்க தானாக முன்வர வேண்டும். ரவுண்டானாக்களின் சுற்றளவை தான் பொதுமக்கள் குறைக்க சொல்கின்றனர். தலைவர்களின் சிலைகளை அகற்ற சொல்லவில்லை. எனவே, ரவுண்டானாக்களின் சுற்றளவு குறைக்க காங்., கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.