/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு அனுமதி பெறாமல் பேனர் அடிப்பதற்கு தடை வருமா?: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை
/
அரசு அனுமதி பெறாமல் பேனர் அடிப்பதற்கு தடை வருமா?: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை
அரசு அனுமதி பெறாமல் பேனர் அடிப்பதற்கு தடை வருமா?: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை
அரசு அனுமதி பெறாமல் பேனர் அடிப்பதற்கு தடை வருமா?: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை
ADDED : ஆக 12, 2024 04:48 AM

புதுச்சேரி: சாலையில் முளைக்கும் சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில், அரசு துறைகள், டிஜிட்டல் பிரிண்டிங் கடைகளுக்கு அரசு உத்தரவினை பிறப்பித்தால் மட்டுமே நிரந்தர தீர்வினை காண முடியும்.
புதுச்சேரியில் அதிகரித்துள்ள சட்ட விரோத பேனர் கலாசார விஷயத்தில் புதுச்சேரி கோர்ட் மீண்டும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி தலைமை நீதிபதி, சென்னை ஐகோர்ட்டிற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். சட்ட விரோத பேனர்களை கட்டுப்படுத்த முடியாமல் புதுச்சேரி அரசு தொடர்ந்து திணறி வருவதற்கு, புதுச்சேரியில் எந்த வித வழிகாட்டுதல்களும், கண்காணிப்பும், ஒருங்கிணைப்பும் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
முதலாவதாக யார் நினைத்தாலும், எங்கு வேண்டுமென்றாலும் சாலையில் சட்ட விரோதமாக பேனர்களை வைத்துவிடலாம் என்ற மனநிலையே மக்களிடம் காணப்படுகின்றது. பேனர்கள் வைத்தவர்கள் யார், அந்த பேனர்களை அச்சடித்த அச்சகம் எது, அந்த பேனருக்கான அனுமதி கடிதம் உள்ளிட்ட எந்த தகவல்களும் இந்த பேனர்களின் இருக்காது.
சுவரொட்டிகள் அச்சடிக்கும்போது, கட்டாயம் அச்சகத்தின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பேனர்கள் அச்சடிக்கும்போது, அதை பிரிண்ட் செய்யும், பிரிண்ட்டிங் கடைகளின் பெயர்கள் இடம் பெறுவதே இல்லை. இதை அரசு கண்டு கொள்ளுவதே இல்லை. சுவரொட்டிகளுக்கும் இருக்கும் விதிமுறை, டிஜிட்டல் பேனருக்கு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்கள் மீது போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் கூட, பேனர்கள் வைத்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதே பெரிய வேலையாக உள்ளது. இதனால் பேனர்கள் வைத்தவர்கள் மீது முன்பின் தெரியாதவர்கள் என்று பொத்தம் பொதுவாக போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இதனால் சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதாக தப்பிவிடுகின்றனர். இதை முறைப்படுத்தினாலே போதும். பாதி பிரச்னை தீர்ந்து விடும்.
எனவே, இனி, பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இரண்டாவதாக, டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் கடைகளுக்கும் அரசு துறைகளுக்கும் எந்த வித சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இதுவே சட்ட விரோத பேனர்கள் முளைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பேனர்களை அச்சடிக்கும் டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் கடைகள், அரசு துறைகளின் அனுமதி பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.
யார் கொடுத்தாலும் அச்சடித்து கையில் கொடுத்து விடுகின்றனர். அப்படி அச்சடிக்கப்பட்ட சட்ட விரோத பேனர்கள் தான், சாலைக்கும் வந்து நகரின் அழகினை கெடுக்கின்றன. எனவே, இனி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல் பேனர்களை அச்சடிக்க டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
மூன்றாவதாக, சட்ட விரோத பேனர்களை அகற்ற அனைத்து துறைகளும் உள்டங்கிய 24 மணி நேர ரோந்து பிரிவு ஒன்றை அரசு தனியாக ஆரம்பிக்க வேண்டும். அனுமதி இல்லாமல் சட்ட விரோத பேனர்களை பகலிலில் வைத்தாலும், சரி, இரவில் வைத்தாலும், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக இந்த ரோந்து பிரிவினை முடுக்கிவிட்டு, சட்ட விரோத பேனர்களை அகற்றம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று விஷயத்தினை அரசு செய்து, முறைப்படுத்தி செய்தாலே போதும், சட்ட விரோத பேனர்கள் முடிவுக்கு வந்துவிடும். அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தலைவலி தீரும்.