/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
/
பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
ADDED : நவ 03, 2024 05:48 AM

புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி, 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 193 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலமாக பாகூர், சேலியமேடு, அரங்கனுார், பின்னாச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
ஏரியில் நடுப்பகுதியில் உள்ள கடம்பை மர காடுகளில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்து வந்தன.
இதனால், பறவைகளின் சொர்க்கபுரியான பாகூர் ஏரி, அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயமாகவும் திகழ்ந்து வந்தது. நீர்க்காகம், பாம்புதாரா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வெள்ளை கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகள் பாகூர் ஏரியை அலங்கரித்து வந்தன.
மரங்களில் தங்கி இருக்கும் பல வகையான பறவைகளின் எச்சம் ஏரி நீரில் கலந்து ஊட்டமிக்க பாசன நீராக வயல்வெளிக்கு பயன்பட்டதால், மகசூலும் அதிகமாக இருந்தது.
கடந்த சில ஆண்டிற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட, பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் மூலமாக, பாகூர் ஏரியில் 37 வகையை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் இங்கு தங்கியிருப்பது தெரிய வந்தது.
ஏரியில் இருந்த கடம்பை மரக் காடுகள் அழிந்து போனதாலும், இயற்கை சூழல் பாதிக்கப்பட்டதாலும் பறவைகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள முள் மரங்களில், சீசன் காலங்களில் வரும் சில வகை வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து தாயகம் திரும்பி செல்கின்றன.
இதனால், பறவைகளை கவரும் வகையில், பாகூர் ஏரியில் நீர் பிடிப்பு பகுதியில் செயற்கை மண் தீவுகள் உருவாக்கி அதில் மரங்களை வளர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று, புதுச்சேரி அரசு கடந்த 2013ம் ஆண்டு, பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதை தொடர்ந்து, புதுச்சேயின் கவர்னராக இருந்த கிரண்பேடி, பாகூர் ஏரியை பலமுறை ஆய்வு செய்தார்.
அப்போது, பாகூர் ஏரி அழகுப்படுத்திட இயற்கை சுற்றுலா திட்டத்தை செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, பாகூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.