/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோ பிரி நிறுவன மோசடி வழக்கில் பெண் கைது ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
/
கோ பிரி நிறுவன மோசடி வழக்கில் பெண் கைது ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கோ பிரி நிறுவன மோசடி வழக்கில் பெண் கைது ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கோ பிரி நிறுவன மோசடி வழக்கில் பெண் கைது ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
ADDED : நவ 01, 2025 03:23 AM

புதுச்சேரி: 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கார் மற்றும் நகை உள்ளிட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, சாரம், காமராஜர் சாலையில் 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம், சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு பெற்று, மோசடி செய்து வருவதாக புகார் தொடர்ந்து, கடந்த ஏப்., 3ம் தேதி சைபர் கிரைம் போலீசார், அதிரடியாக 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2.45 கோடி மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அமலாக்க துறை நடத்திய சோதனையில், புதுச்சேரியில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்ததும், 13 வங்கி கணக்குகளில் ரூ. 20 கோடி வைத்திருப்பதை கண்டுபிடித்து, அந்த வங்கி கணக்குகளை முடக்கினர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கோ பிரி சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த நிஷாந்த் அகமது உள்ளிட்டோரை தேடி வந்தனர். மேலும், நிஷாந்த் அகமது, வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அமலாக்க துறை 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கியது. மேலும், அமலாக்கத்துறை, அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, பொதுமக்களிடம் பெருந்தொகையை வசூலித்தது. வசூல் தொகை குறித்து கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காதது ஆகிய குற்ற பிரிவுகளின் கீழ் நிஷாந்த் அகமதுவை கடந்த செப்டம்பர் 8ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கோ பிரி சைக்கிள் நிறுவன வழக்கில், இணைய வழி குற்றங்கள் இல்லாததாலும், பெரும் தொகை மோசடி நடந்திருப்பதால், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட நிஷாந்த் அகமதுவை கோர்ட் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதில், கோ பிரி நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநர்களாக அஜய்முருகன், கிருஷ்ணகுமார், இக்பால் பாஷா மற்றும் அம்பிகா ஆகியோர் இருப்பதும், அவர்களில் புதுச்சேரி, நெல்லித்தோப்பை சேர்ந்த அம்பிகா, புதுச்சேரியை தலைமையகமாக கொண்ட தென்மண்டல நிர்வாகியாக செயல்பட்டு, புதுச்சேரியில் பலரிடம் ரூ.5 கோடி வசூலித்து, அதில் ஒரு கோடி ரூபாய் அவர் பெற்றது தெரிய வந்தது.
அதன்பேரில், சென்னையில் இருந்த அம்பிகாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த 11ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், அவரை கோர்ட் அனுமதி பெற்று, கடந்த 24ம் தேதி முதல் 28 ம் தேதிவரை தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர். அதில், இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்த, அம்பிகா, மோசடி பணத்தில் வாங்கிய கார் மற்றும் நகைகள் உள்ளிட்ட ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரை கடந்த 28ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

