ADDED : மே 03, 2025 05:13 AM
புதுச்சேரி : ஆன்லைன் வர்த்தகத்தில் புதுச்சேரி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் மர்மநபர் அனுப்பிய லிங்க் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 8 லட்சம் வரை கடன் தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி அவர் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். அப்போது, விண்ணப்பத்திற்கான செயலாக்க கட்டணம் செலுத்தும்படி மர்மநபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் மர்மநபருக்கு 67 ஆயிரத்து 925 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், காலாப்பட்டைச் சேர்ந்த ஒருவர் 4 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 925 ரூபாயை இழந்துள்ளனர்.
புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.