ADDED : பிப் 21, 2024 01:40 AM
புதுச்சேரி : பெண் ஊர்காவல்படை வீரர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில் 746 பேர் பங்கேற்றதில், 383 பேர் தகுதி பெற்றனர்.
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய கடந்த அக்., மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 1ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்கியது. ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது. ஆண்களுக்கு 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் 3034 பேர் தகுதி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து, பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது. 1,200 பேர் அழைக்கப்பட்டதில்746 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, உயரம், எடை சரிபார்த்த பின்பு, 45 விநாடியில் 200 மீட்டர் ஓட்டம், 2.75 மீட்டர் நீளம் தாண்டுதல், 0.9 மீட்டர் உயரம் தண்டுதல் நடத்தப்பட்டது. இதில், 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாளை மறுநாள் 23ம் தேதி வரை பெண் ஊர்காவல் படை வீரருக்கான உடற்தகுதி தேர்வு நடக்கிறது.
