ADDED : செப் 27, 2025 02:43 AM

பாகூர் : பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சுகாதாரத் திருவிழா நடந்தது.
மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, 'ஆரோக்கியமான பெண்களே குடும்பத்தின் பலம்' என்ற கருத்தை மையப்படுத்தி, நடந்த சுகாதாரத் திருவிழாவிற்கு, சுகாதாரத் துறை துணை இயக்குனர் சமிமுனிஷா, தடுப்பூசி பிரிவு துணை இயக்குனர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில், நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, கர்ப்ப வாய் புற்றுநோய், மலேரியா, பைலேரியா பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், ஆயுஷ் இயக்குனரகம் சார்பில், ஹோமியோபதி ஆயுர்வேதா சித்த மருத்துவம் அளிக்கப்பட்டது.
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு பதிவு செய்து வழங்கப்பட்டது. முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன அடைந்தனர். ஏற்பாடுகளை, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு தலைமையில் சுகாதார ஊழியர்கள் செய்திருந்தனர்.