
புதுச்சேரி: உலக மீனவர் தின விழா மேற்குவங்க மாநிலம் தம்லுாக் நகரில் கொண்டாடப்பட்டது.
மேற்குவங்க மாநில ஐக்கிய மீனவர் சங்கம், பூர்வ மிதினாபூர் மாவட்ட மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவர் லட்சுமி நாராயண ஜெனா தலைமை தாங்கினார்.
மேற்குவங்க மாநில மீன்வளத்துறை அமைச்சர் பிப்லாப் ராய் சவுத்ரி குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உத்தம் பாரீக், தேசிய மீனவர் பேரவை தலைவரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்திய மீனவ தொழில் கூட்டமைப்பு தலைவர் ஷியாம் சுந்தர் தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மீனவர் பேரவை தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தேசிய தலைவர் இளங்கோ தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் வாழும் பாரம்பரிய கடல் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள் அனைவரையும் பட்டியல் இன பழங்குடியினராக மத்திய அரசு அறிவித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மீனவ பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய அரசின் உயர் மட்ட அமைச்சரகளை சந்திப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.