/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி
/
உலகத் தாய் மொழி நாள் மொழி உணர்வுப் பேரணி
ADDED : பிப் 21, 2024 02:56 AM
புதுச்சேரி: உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு, மொழி உணர்வுப் பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி, உலகத் தாய் மொழி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, இராதே அறக்கட்டளை, இந்தியப் பொறியாளர் கழகத்தின் புதுச்சேரி மாநில மையம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் மொழி உணர்வுப் பேரணி இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.
மறைமலை அடிகள் சாலையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் பேரணி துவங்குகிறது. பேரணியை, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.பேரணியில், தமிழறிஞர்களின் படங்களுடன் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழறிஞர்கள், இலக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு 'தமிழில் தலைப்பெழுத்திடுவோம்', 'தமிழில் கையொப்பமிடுவோம்' போன்ற கோஷங்களுடன் பேரணியாக செல்கின்றனர்.
மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மாதா கோவில் தெரு வழியாக செயிண்ட் தான்ழ் வீதியில் பேரணி நிறைவடைகிறது.மொழி உணர்வுப் பேரணிக்கான ஏற்பாடுகளை, கவிஞர் இராதே மற்றும் தமிழறிஞர்கள் செய்துள்ளனர்.

