ADDED : மே 02, 2026 01:38 AM

புதுச்சேரி: அரியூர் உலக வாழியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அடுத்த அரியூர் கிராமத்தில் சுந்தர விநாயகர், உலக வாழியம்மன், ஐயனார், உருவாத்தம்மன், சப்த கன்னிகா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தேர் மற்றும் செடல் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வீதியுலா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 28ம் தேதி காலை சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று உலக வாழியம்மன் திருத் தேர் வீதியுலா நடந்தது. தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி, வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, செடல் உற்சவம் நடந்தது.
இன்று (2ம் தேதி) இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம், 3ம் தேதி மாலை 3:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
