ADDED : மே 28, 2026 06:30 AM
இப்பகுதியில் கடந்த வாரம் பெண்களுக்கு கர்ப்ப காலத்திற்கான யோகா பயிற்சி முறைகளை பார்த்தோம். இந்த வாரம் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கான யோகா சிகிச்சை முறைகளை பார்ப்போம்.
நாளமில்லா சுரப்பிகளின் செயலை சமநிலைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நிறுத்தத்தின் ஹார்மோன் மாற்றங்களின் விளைவுகளை யோகா குறைக்கிறது. இது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நிகழும் ஹார்மோன் மற்றும் சுரப்பி மாற்றங்களை சரி செய்ய உதவுகிறது. நிற்பது, உட்காருவது, படுப்பது, பின் வளைவது, முன்னோக்கி வளைவது, திருப்பங்கள் மற்றும் தலைகீழான ஆசனங்கள் போன்ற அனைத்து வகையான நடைமுறைகளின் தொடர் பயிற்சி, உடலின் அனைத்து சுரப்பிகள், உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களைத் துாண்டி செயல்படுத்த உதவுகிறது.
மாதவிடாய் குறித்து அறிகுறிகளும் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஒரு அறிகுறியின் விரும்பத்தகாத விளைவை சரி செய்ய யோகாவை பயன்படுத்துவது பொதுவாக உடலின் மற்ற பகுதிகளிலும் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு யோகாசனமும் உடலின் அனைத்து அமைப்புகளிலும் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
புஜங்கினி முத்திரை நாகப்பாம்பு போல் செய்ய, உங்கள் முழு உடலையும் நேர் கோட்டில் உன் முகாசனத்தை செய்யுங்கள்.
இந்த நுட்பத்தில் சுவாசிக்கும் முறை மற்றும் பற்களை இறுக்கி பாம்பின் சீறல் போல் ஒலி உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மெதுவாக கைகளை முன்னோக்கி கொண்டு வந்து, உள்ளங்கைகளை தோள்களுடன் சேர்த்து தரையில் வைக்கவும். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்கவும். ஒரு வலுவான ஹிஸ் என்ற ஒலி எழுப்பிக் கொண்டு புஜங்காசனத்திற்கு வரவும்.
மூச்சை உள்ளிழுக்கும் போது மெதுவாக தரைக்கு வரவும், பின்னர் மீண்டும் ஒரு வலுவான சீற்றத்துடன் தலையை பின்னால் சாய்க்கவும். இந்த முத்ராவை ஒவ்வொரு அமர்விலும் குறைந்தது மூன்று முதல் ஆறு முறை செய்யவும்.
பயிற்சியை முடித்த பிறகு, முகம் கீழே பார்த்தவாறு படுக்கவும். கைகளை உடலின் பக்கமாக வைத்து, உங்கள் தலையை பக்கமாகத் திருப்புங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.
ஷீதலி பிராணயாமம் வசதியாக நிமிர்ந்து வஜ்ராசனத்தில் உட்காரவும். ஒரு பறவையின் மூக்கைப்போன்ற நாக்கை வெளியே நீட்டி, குழாய் போன்று உட்புறமாக மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாக்கைச் அரை அல்லது முக்கால் அங்குலம் உதட்டை தாண்டி நீட்டிக்கொள்ளுங்கள். நுரையீரல் முழுவதுமாக பெருகும் வரை, சுருட்டப்பட்ட நாக்கின் வழியாக, காற்றை உள்ளிழுக்கவும். குளிர்ச்சியான காற்று உள்ளே செல்வதை உணருங்கள். சுவாசம் சிரமமின்றி நிறுத்தவும். பின்னர் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். அடுத்த உள்ளிழுக்கும் முன் சுவாசத்தை மீண்டும் நிறுத்தவும். இவ்வாறு குறைந்தது ஒன்பது முறையாவது செய்யவும்.
சீத்காரி பிராணாயாமம் நிமிர்ந்து வஜ்ர ஆசனத்தில் உட்காரவும். இரு நாசி வழியாகவும் மூச்சை வெளிவிடவும். நாக்கை பின்னோக்கி மடிக்க நாக்கின் நுனியை மேல் அன்னத்தில் வைத்து அழுத்தி மடிப்பில் சிறிது இடைவெளி விடவும். நாக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.
மூச்சை நிதானமாக நிறுத்தவும். இரண்டு நாசி வழியாகவும் மெதுவாக தொடர்ச்சியாக மூச்சை வெளிவிடவும். பின்னர் மீண்டும் மூச்சை நிதானமாக நிறுத்தவும். குறைந்தது ஒன்பது முறை செய்யவும்.
பிரம்மரி பிராணாயாமம் வஜ்ராசனத்தில் குதிகால் மீது நிமிர்ந்து உட்காரவும். சண்முகி முத்திரையில் கட்டை விரலால் வெளிப்புற செவிவழியை மூடுங்கள். கண்களை மூடி முதல் இரண்டு விரல்கள் இமைகளுக்கு மேல் வைக்கவும், அதே நேரத்தில் மோதிர விரல்கள் மூக்கின் வழியாக காற்றின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இரு நாசிகள் மேல் வைக்கவும். சுண்டு விரலை மூடிய உதடுகளுக்கு மேல் வைக்கவும். இந்த முத்திரை முகத்தின் முக மற்றும் ட்ரைஜிமினல் நரம்புகளுடன் கைகளின் நரம்புகளின் ஆற்றலை ஒன்றிணைக்க உதவுகிறது.
ஆறு எண்ணிக்கைகளுக்கு பிறகு மூச்சை மெதுவாக வெளியே விடவும். அதே சமயம் பெண் தேனீயின் சத்தம் போல ஒலி எழுப்பவும்.
தேவையான சுற்றுகள் செய்த பிறகு, உங்கள் கைகளை உங்கள் தொடைகளில் வைத்து, வஜ்ராசனத்தில் உட்கார்ந்து சில நிமிடங்கள் ஆழ்ந்த அமைதியை அனுபவியுங்கள்.
