ADDED : நவ 23, 2026 06:01 PM
அரியாங்குப்பம்: விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதை தட்டி கேட்ட போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி , தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து பிரிவில் காவலராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று (நவ.,22) தவளக்குப்பம் சந்திப்பில் போக்குவரத்து சீரமைப்பு பணியை முடித்து விட்டு, மதியம் 2:00 மணியளவில் அபிேஷகப்பாக்கம் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில், அதிக வேகமாக, விபத்து ஏற்படுத்து வகையில் பல்சர் பைக்கில் சென்ற அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த கனகராஜ், 24; என்பரை நிறுத்தி ஏன் இப்படி பைக் ஓட்டுகிறாய் என கண்டித்துள்ளார்.
அதில், ஆத்திரமடைந்த, கனகராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, கொலை மிரட்டல் விடுத்து, அவரை தாக்க முன்றார். உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அஜித்குமார் புகாரின் பேரில், தவளக்குப்பம் உதவி சப் இன்ஸ்பெக்டர் பான்குமார் வழக்குப் பதிந்து, கனகராஜை இன்று (நவ.,23) கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
