ADDED : மார் 22, 2026 05:43 PM
திருக்கனுார்: திருக்கனுார் சோதனைச்சாவடி தேர்தல் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாநில எல்லைப் பகுதிகளில் தேர்தல் துறையினர் சோதனைச்சாவடிகளை அமைத்து துணை ராணுவத்தினருடன் இணைந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்பேடி, திருக்கனுார் எல்லை சோதனைச் சாவடியில் செல்வின் ஜூடோ அமிர்தராஜ் தலைமையிலான தேர்தல் நிலையக் குழுவினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த காரை (பி.ஓய் 01 பி.எம். 9229) நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, மது போதையில் இருந்த காரை ஓட்டி வந்த மண்ணாடிப்பட்டைச் சேர்ந்த செல்வராஜ், 40; என்பவர் தேர்தல்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறில் ஈடுபட்டதுடன், அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்.
இதுகுறித்து செல்வின் ஜூடோ அமிர்தராஜ் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் செல்வராஜ் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்தனர். மேலும், காரை பறிமுதல் செய்தனர்.
