ADDED : டிச 27, 2024 06:10 AM

அரியாங்குப்பம்: கார் கண்ணாடியை உடைத்து, நகையை திருடிய அரியாங்குப்பம் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் சைத்தன்யா சாய்ராம்,31; இவர் தனது குடும்பத்துடன் கடந்த 21ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். கடந்த 23ம் தேதி சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு காரில் குடும்பத்துடன் சென்றார்.
அங்கு அவர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி கார் சீட்டில் வைத்து, கதவை பூட்டிவிட்டு கடலில் குளித்தனர்.
திரும்பி வந்து பார்த்தபோது கார் கதவின் கண்ணாடி உடைந்திருந்தது. சீட்டில் வைத்திருந்த 40 கிராம் நகை மற்றும் 6,000 பணம் திருடு போயிருந்தது.
புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், குற்றப்பிரிவு ஏட்டு, சிரஞ்சீவி, வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அரியாங்குப்பம், ஓடைவெளியை சேர்ந்த கருணாகரன் மகன் சுரேந்தர்,26; என்பவரை நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த 40 கிராம் நகை, அவர் வைத்திருந்த பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே பைக் திருட்டு வழக்கு உள்ளது.