ADDED : ஜூன் 12, 2026 08:50 AM
புதுச்சேரி: திருக்கனுார் அருகே முன்விரோதம் காரணமாக நான்கு பேரை கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு, அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ், 28; தனியார் கம்பெனி ஊழியர். இவருடன் அதே பகுதியை சேர்ந்த ராஜி 25, என்பவர் வேலை செய்து வருகிறார். இருவ ருக்கும் முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு ராஜி தனது நண்பர்களுடன் சோம்பேட்டில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சதீஷை பார்த்து கேலி செய்வது போல் ராஜி சிரித்தார்.
கோபமடைந்த சதீஷ் நேற்று இரவு 9:30 மணி அளவில் தனது வீட்டின் வெளியே நின்று இருந்த ராஜியை பார்த்து நேற்று முன்தினம் ஏன் என்னை பார்த்து சிரித்தாய் என, கேட்டார்.
அப்போது அங்கு வந்த ராஜியின் அண்ணன் முத்துக்குமார், 28, சதீஷை திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
கோபமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ராஜி, முத்துக்குமார், அவரது உறவினர் ராமமூர்த்தி, 52, ஆகியோரை சரமாரியாக முகம் மற்றும் கை, கால்களில் கிழித்தார்.
இதைப் பார்த்த அருகில் இருந்த சாருஹாசன், 26, என்பவர் சதீஷை தடுத்தபோது, அவரையும் சதீஷ் கத்தியால் முகத்தில் கிழித்தார். இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் சதீஷ் தப்பிச் சென்றார்.
படுகாயம் அடைந்த முத்துக்குமரன், ராஜி, ராமமூர்த்தி, சாருஹாசன் ஆகியோர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்து வருகின்றனர்.
