/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஆசிய பாட்மின்டன்: பைனலில் இந்தியா
/
ஆசிய பாட்மின்டன்: பைனலில் இந்தியா
ADDED : பிப் 17, 2024 07:54 PM

ஷா ஆலம்: ஆசிய பாட்மின்டனில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் 3-2 என ஜப்பானை வென்றது.
மலேசியாவில் ஆசிய பாட்மின்டன் (அணிகள்) சாம்பியன்ஷிப் 5வது சீசன் நடக்கிறது. இதன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அயா ஓஹோரி மோதினர். இதில் சிந்து 13-21, 20-22 என தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 16-21, 22-20 என ஜப்பானின் நமி மட்சுயமா, சிஹாரு ஷிடா ஜோடியை வென்றது.
ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா 21-17, 21-14 என ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிந்து ஜோடி 14-21, 11-21 என ஜப்பானின் ரெனா மியாவுரா, அயகோ சகுரமோடோ ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து போட்டி 2-2 என சமநிலை வகித்தது.
ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-14, 21-18 என ஜப்பானின் நட்சுகி நிடைராவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.