பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் * 16 மாதத்திற்குப் பின் அபாரம்
பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் * 16 மாதத்திற்குப் பின் அபாரம்
ADDED : மார் 23, 2024 11:03 PM

பசெல்: சர்வதேச பாட்மின்டன் அரங்கில் 16 மாதத்துக்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
சுவிட்சர்லாந்தில் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீன தைபே சியாவோ லீயை சந்தித்தார். 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஸ்ரீகாந்த் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 21-10 என எளிதாக வசப்படுத்திய இவர், அடுத்த செட்டையும் 21-14 என கைப்பற்றினார்.
35 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ஸ்ரீகாந்த் 21-10, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். சர்வதேச பாட்மின்டனில் 16 மாதத்திற்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக 2022, நவ.,ல் ஹைலோ ஓபன் தொடர் அரையிறுதியில் விளையாடினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 23-21, 17-21, 15-21 என டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கேவிடம் போராடி தோல்வியடைந்தார். இந்திய வீரர் பிரியான்ஷு, 15-21, 19-21 என சீன தைபே வீரர் தியன் செனிடம் காலிறுதியில் தோற்றார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி 14-21, 15-21 என ஆஸ்திரேலிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.
