ADDED : நவ 19, 2024 11:28 PM

ஷென்ஜென்: சீன மாஸ்டர்ஸ் முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா, உலகின் 'நம்பர்-12' வீராங்கனை பெய்வெனை வென்றார்.
சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 50 வது இடத்திலுள்ள இந்தியாவின் இளம் வீராங்கனை அனுபமா, 'நம்பர்-12' ஆக உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஜங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் 10-3, 18-11 என முந்திய அனுபமா, 21-17 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பதிலடி தந்த பெய்வென் 21-8 என எளிதாக வசப்படுத்தினார். மூன்றாவது, கடைசி செட்டில் 2-5 என பின் தங்கிய போதும், பின் 18-14 என முந்தினார். கடைசியில் 22-20 என வசப்படுத்தினார்.
முடிவில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்றார். அனுபமா பாட்மின்டன் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாக இது அமைந்தது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு, 24-22, 13-21, 18-21 என இந்தோனேஷியாவின் சிகோ ஆராவிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சிக்கி ரெட்டி, சுமீத் ரெட்டி ஜோடி 23-21, 17-21, 21-17 என அமெரிக்காவின் பிரெஸ்லே, ஜென்னி ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
