/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சாதிப்பாரா லக்சயா
/
பாட்மின்டன்: சாதிப்பாரா லக்சயா
ADDED : அக் 20, 2025 08:25 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவில் லக்சயா சென், அன்மோல் உள்ளிட்டோர் சாதிக்க காத்திருக்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது.
கடந்த 2022, 2024ல் பாரிஸ் தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையரில் களமிறங்குகிறது. தவிர, இந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றது போன்றவை இந்திய ஜோடி சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையும்.
ஆண்கள் ஒற்றையரில் உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென், முதல் சுற்றில் நிகுயேனை சந்திக்க உள்ளார். சமீபத்திய ஹாங்காங் ஓபன் பைனலுக்கு முன்னேறிய லக்சயா சாதிக்க முயற்சிக்கலாம். இவருடன் ஆயுஷ் ஷெட்டியும் பங்கேற்கிறார்.
பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் அன்மோல் கார்ப், முதல் சுற்றில் தென் கொரியாவின் வலிமையான ஆன் சே யங்கை சந்திக்க உள்ளார். மற்றொரு வீராங்கனை அனுபமா, இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற சீனாவின் ஹான் யுவேவை சந்திக்க காத்திருக்கிறார்.
தவிர, சாய் பிரதீக், கிருஷ்ணமூர்த்தி ஜோடி, பெண்கள் இரட்டையரில் கவிப்பிரியா, சிம்ரன் சிங், ருதுபர்ணா-ஸ்வேதாபர்ணா சகோதரிகளும் இத்தொடரில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.