ADDED : ஜன 08, 2026 10:37 PM

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து 30, இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் மியாஜகியை சந்தித்தார். முதல் செட்டை 21-8 என எளிதாக வென்றார் சிந்து. தொடர்ந்து அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தினார்.
33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21-8, 21-13 என நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் மூன்று முறை உலக சாம்பியன் ஆன, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் யமாகுச்சியை சந்திக்க உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, 2025 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மலேசியாவின் ஜுனெய்தி ஆரிப், ராய் கிங் யாப் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 21-18 என இந்திய ஜோடி வென்றது. தொடர்ந்து இரண்டாவது செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றியது. 39 நிமிட போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-18, 21-12 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
லக்சயா ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், 20-22, 15-21 என ஹாங்காங்கின் லீ சியுக்கிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஷி யு குயியை சந்தித்தார். 70 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஆயுஷ், 18-21, 21-18, 12-21 என தோல்வியடைந்தார்.
