இந்திய அணியில் சிந்து, லக்சயா * தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டனில்
இந்திய அணியில் சிந்து, லக்சயா * தாமஸ்-உபர் கோப்பை பாட்மின்டனில்
ADDED : மார் 24, 2026 11:02 PM

புதுடில்லி: தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடருக்கான இந்திய அணியில் சிந்து, லக்சயா என முன்னணி நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டனர்.
டென்மார்க்கில், தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் (ஏப். 24 - மே 3) தொடர் நடக்கவுள்ளது. கடந்த 2022ல் முதன்முறையாக தாமஸ் கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணி, 'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' சீனா, கனடா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கான உபர் கோப்பை தொடரில், இரண்டு முறை (2014, 2016) வெண்கலம் கைப்பற்றிய இந்திய அணி, 'ஏ' பிரிவில் 'நடப்பு சாம்பியன்' சீனா, டென்மார்க், உக்ரைன் அணிகளுடன் உள்ளது.
இதற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டன. பெண்கள் அணியில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற அனுபவ சிந்து, உன்னதி ஹூடா, தான்வி சர்மா, தேவிகா, இஷாராணி, திரீசா, காயத்ரி, தமிழகத்தின் கவிப்பிரியா, சிம்ரன், தனிஷா இடம் பெற்றுள்ளனர்.
ஆண்கள் அணியில் இளம் வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியுடன், அனுபவ வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் இடம் பிடித்தனர். தவிர சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, அர்ஜுன், துருவ் கபிலா, தமிழகத்தின் ஹரிகரன் அம்சகருணன், கிரண் ஜார்ஜ் இடம் பிடித்துள்ளனர்.
