இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * தாய்லாந்து பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * தாய்லாந்து பாட்மின்டனில்...
ADDED : மே 12, 2026 11:01 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, எர்வியான்ஷா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் போராடிய இந்திய ஜோடி 21-23 என நழுவவிட்டது. மூன்றாவது செட் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 21-10 என எளிதாக வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 21-19, 21-23, 21-10 என வெற்றி பெற்றது.
பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, 5-21, 7-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் கெட்கிலியங்கிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மானவ் சவுத்ரி, 19-21, 18-21 என மலேசியாவின் லி ஜி ஜியாவிடம் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் மோஹித், ரக் ஷிதா ஜோடி 11-21, 18-21 என சீன தைபேவின் பு செங், யு ஹிசுவான் ஜோடியிடம் தோற்றது.
