ADDED : ஜன 31, 2026 11:20 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் தேவிகா முன்னேறினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகத் தரவரிசையில் 63 வது இடத்திலுள்ள இந்தியாவின் தேவிகா சிஹாக், 'நம்பர்-35' ஆக உள்ள சீனாவின் யு ஹிசுன் ஹுவாங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய தேவிகா, ஒரு கட்டத்தில் 15-20 என்ற மோசமான நிலையில் இருந்தார். பின் எழுச்சி பெற்ற இவர், தொடர்ந்து 7 'கேம்களை' கைப்பற்ற, முதல் செட்டை 22-20 என வசப்படுத்தினார். பின் நடந்த இரண்டாவது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.
38 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் தேவிகா, 22-20, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை ('நம்பர்-68') சந்திக்க உள்ளார்.

