இரண்டாவது சுற்றில் சிந்து, லக்சயா * தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்
இரண்டாவது சுற்றில் சிந்து, லக்சயா * தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில்
ADDED : மே 13, 2026 11:58 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சர்வதேச பாட்மின்டன் ஓபன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சிந்து, சீன தைபேவின் டுங் சியோ டாங்கை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-9 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-12 என வசப்படுத்தினார். 33 நிமிடம் நடந்த போட்டி முடிவில் சிந்து, 21-9, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா, 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நட்சுகியை வீழ்த்தினார். இந்திய வீராங்கனை மாளவிகா, 13-21, 28-24, 21-13 என்ற கணக்கில் கனடாவின் வெங் யு ஜங்கை சாய்த்தார்.
இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் பர்ன்பாவேயிடம் 21-11, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் தான்வி சர்மா, 17-21, 8-21 என ஜப்பானின் அகேச்சியிடம் வீழ்ந்தார்.
லக்சயா அபாரம்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூர் வீரர் ஜியா ஹெங் மோதினர். இதில் லக்சயா 21-16, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
உலக தர வரிசையில் ௨௯வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த், இத்தொடரின் 'நம்பர்-8' வீரர் லோ கியானை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 13-21, 21-17, 4-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நரகோவாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
