காலிறுதியில் சிந்து, லக்சயா * தாய்லாந்து பாட்மின்டனில்...
காலிறுதியில் சிந்து, லக்சயா * தாய்லாந்து பாட்மின்டனில்...
ADDED : மே 14, 2026 10:52 PM

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சர்வதேச பாட்மின்டன் ஓபன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-6' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் அமலியை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-13 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-15 என வென்றார். 28 நிமிடம் மட்டும் நடந்த போட்டி முடிவில் சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் தேவிகா, 21-23, 11-21 என தாய்லாந்தின் பாட்னிபுத்திடம் தோல்வியடைந்தார்.
லக்சயா கலக்கல்
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் லக்சயா சென், ஜு ஜுவான் செனுடன் மோதினார். 39 நிமிடம் நீடித்த இப்போட்டியில் லக்சயா 21-12, 21-13 என்ற நேர் செட்டில் வென்ற, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 16-21, 21-11, 18-21 என சீன தைபே வீரர் சு லி யங்கிடம் போராடி தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1', இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஹைகல், ஹூட்டிங் ஜோடியை எதிர்கொண்டது. 44 நிமிடம் நடந்த போட்டியில் இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
