இரண்டாவது சுற்றில் தேவிகா * மலேசிய பாட்மின்டனில் அபாரம்
இரண்டாவது சுற்றில் தேவிகா * மலேசிய பாட்மின்டனில் அபாரம்
ADDED : மே 20, 2026 11:05 PM

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் அசத்திய இந்தியாவின் அஷ்மிதா ('நம்பர்-71'), நேற்று தனது முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 56வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் ராமதானி விர்யவானை எதிர்கொண்டார். 34 நிமிடம் நடந்த போட்டி முடிவில், அஷ்மிதா 21-16, 21-13 என எளிதாக வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா, தென் கொரியாவின் பார்க் காவை சந்தித்தார். முதல் செட்டை இழந்த தேவிகா (19-21), அடுத்த இரு செட்டை வசப்படுத்தினார். முடிவில் தேவிகா, 19-21, 21-18, 21-19 என வென்றார்.
மற்றொரு போட்டியில் முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட இந்தியாவின் மாளவிகா, ஜெர்மனியின் யுவோனே லியை சந்தித்தார். ஒரு மணி நேரம் நடந்த போட்டி முடிவில், மாளவிகா 21-17, 16-21, 21-9 என வெற்றி பெற்றார்.
லக்சயா ஏமாற்றம்
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 24, 17-21, 11-21 என இந்தோனேஷியாவின் 18 வயது வீரர் ஜகி உபய்தில்லாவிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரனாய், 17-21, 22-20, 22-24 என ஜப்பானின் நரோகாவிடம் போராடி தோல்வியடைந்தார்.
