இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
ADDED : மே 26, 2026 11:27 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகத்தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 6வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் வர்தானியை எதிர்கொண்டார். 44 நிமிடம் நடந்த போட்டி முடிவில், சிந்து 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, 14-21, 10-21 என ஜப்பானின் மியாஜகியிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-11, 14-21, 12-21 என கனடாவின் விக்டர் லாயிடம் வீழ்ந்தார்.
இரட்டையரில் அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரஸ்லே, சென் ஜி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 26-28 என போராடி இழந்தது இந்திய ஜோடி. பின் அடுத்த இரு செட்டுகளை 21-15, 21-13 என எளிதாக வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 15 நிமிடம் நடந்த போட்டியில் இந்திய ஜோடி 26-28, 21-15, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி 15-21, 13-21 என ஜப்பானின் கோகி, கோபயாஷி ஜோடியிடம் தோல்வியடைந்தது.
