காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் அபாரம்
காலிறுதிக்கு முன்னேறினார் சிந்து * சிங்கப்பூர் பாட்மின்டனில் அபாரம்
ADDED : மே 28, 2026 11:02 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், உலகத்தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 19 வது இடத்திலுள்ள ஜப்பானின் ரிகோ குன்ஜியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21-9 என எளிதாக வென்ற சிந்து, அடுத்த செட்டை 21-12 என வசப்படுத்தினார். 37 நிமிடம் மட்டும் நடந்த போட்டி முடிவில், சிந்து 21-9, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், 'நம்பர்-2' வீரர், தாய்லாந்தின் விதித்சர்னை சந்தித்தார். முதல் செட்டில் லக்சயா 2-0 என முன்னிலையில் இருந்த போது, காயம் காரணமாக விதித்சர்ன் விலகினார். லக்சயா காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேவின் லீ ஜே, யாங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-15, 11-21, 21-18 என போராடி வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, 8-21, 21-17, 21-16 என ஜப்பானின் வடனபே, டகுச்சி ஜோடியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரனாய், 18-21, 21-16, 15-21 என இந்தோனேஷியாவின் லோ கியானிடம் போராடி தோல்வியடைந்தார்.
